பப்ஜி என்பது உலக அளவில் மிகவும் பிரபலமான மொபைல் விளையாட்டு ஆகும். இது சீனாவைச் சேர்ந்த டென்சென்ட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது. கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இந்தியா, சீனா மோதலையடுத்து இந்திய அரசு முதற்கட்டமாக டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளைத் தடை செய்தது. அதனையடுத்து மேலும் சில செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட இருக்கிறது என்ற தகவலும் வெளியானது. அதன்படி இந்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு சமீபத்தில் தடை விதித்தது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் கருத்தில் கொண்டு சீன செயலிகள் மீதான இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் இந்தச் செயலுக்கு சீனாவின் வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் பப்ஜி விளையாட்டு செயலியின் தாய் நிறுவனமான டென்சென்ட் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளது.
அதில், "பயனாளர்களின் தகவல்கள் மற்றும் தரவுகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்தியாவில் எங்கள் செயலி மீதான தடை உத்தரவை நீக்கி, தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.