ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான முல்லா அப்துல் கனி பரதர், ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அறிவிக்கப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே தலிபான்களுக்கு எதிரான அமைப்பு ஒன்று அந்நாட்டில் உருவாகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காபூலுக்குள் தலிபான்கள் மீண்டும் நுழையத் தொடங்கியதுமே ஆப்கானிஸ்தான் துணை அதிபராக இருந்த அம்ருல்லா சாலே, "நான் என்றும் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் தலிபான் தீவிரவாதிகளுக்குத் தலைவணங்க மாட்டேன். எனது தலைவர் அகமது ஷா மசூதின் மாண்புக்கு எப்போதும் நான் துரோகம் இழைக்க மாட்டேன்" என தெரிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து அம்ருல்லா சாலே, தலிபான்களுக்கு எதிரான போராளி குழுவின் அகமது ஷா மசூத்தின் மகனான அஹ்மத் மசூத் உள்ளிட்ட சிலருடன் ஆலோசனை நடத்தும் புகைப்படங்கள் வெளியாகின. தலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் இன்று கைப்பற்றியிருந்தாலும் பாஞ்ஷிர் பகுதி அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அப்பகுதி தலிபான்களுக்கு எதிரான போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 90களில் தலிபான் மிகுந்த பலம் பெற்றிருந்தபோதும் பாஞ்ஷிர் பகுதியை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அந்த அளவிற்குப் பாஞ்ஷிர் பகுதியைப் போராளி குழுக்கள் பாதுகாத்துவந்தனர். அதன் தலைவராக அகமது ஷா மசூத் இருந்தார். இதனால் அம்ருல்லா சாலேவும், அகமது ஷா மசூத்தின் மகனான அஹ்மத் மசூத்தும் ஆலோசனை நடத்தும் புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும், தலிபான்களுக்கு எதிரான இயக்கம் உருவாவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் அம்ருல்லா சாலே நேற்று (17.08.2021) தனது ட்விட்டர் பதிவில், "ஆப்கானிஸ்தான் சட்டப்படி, நாட்டின் அதிபர் காணாமல் போனாலோ, தப்பி ஓடிவிட்டாலோ, பதவி விலகிவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ துணை அதிபர்தான் காபந்து அதிபராவர். நான் நாட்டிற்குள்ளே இருக்கிறேன். நான்தான் சட்டபூர்வமான காபந்து அதிபர்" என தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து தலைவர்களின் ஆதரவையும் பெற அவர்களைத் தொடர்புகொண்டுவருவதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பரபரப்பு அதிகரித்துவருகிறது.
இந்தநிலையில் ஏற்கனவே சிறையிலிருந்த தீவிரவாதிகளை விடுவித்துவந்த தலிபான்கள், தற்போது மேலும் 2,300 தீவிரவாதிகளை சிறையிலிருந்து விடுத்துள்ளனர். விடுவிக்கப்பட்ட தீவிரவாதிகளில் அல்கய்தா, ஐஎஸ்ஐஎஸ் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதிகளும் அடங்குவர்.
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். தற்போது இந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பது பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக அமையும் என கருதப்படுகிறது. பாகிஸ்தானில் சீனப் பொறியாளர்கள் சென்ற பேருந்தின் மீது தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்புதான் தாக்குதல் நடத்தியதாகவும், அத்தாக்குதலுக்குப் பின்னால் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் இருப்பதாக பாகிஸ்தான் அண்மையில் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.