ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதற்கிடையே ஆப்கான் அதிபராகத் தன்னை அறிவித்துக்கொண்டுள்ள அம்ருல்லா சாலே, தலிபான் எதிர்ப்புக் குழு ஒன்றின் தலைவராக இருந்த அகமது ஷா மசூத்தின் மகனான அஹமத் மசூத்துடன் இணைந்து தலிபான்களுக்கு எதிராக ஒரு போராளி குழுவை உருவாக்கியுள்ளார். இந்த குழு, இதுவரை தலிபான்களால் கைப்பற்ற முடியாத பாஞ்ஷிர் பகுதியில் தற்போது உள்ளது.
இதனையடுத்து நூற்றுக்கணக்கான தலிபான்கள், பாஞ்ஷிர் பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அங்கு இருதரப்புக்குமிடையே மோதல் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய அஹமத் மசூத், "பேச்சுவார்த்தைதான் ஒரே வழி என நாங்கள் தலிபான்களுக்கு உணர்த்த விரும்புகிறோம். போர் மூளுவதை நாங்கள் விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்.
அதேநேரத்தில் பாஞ்ஷிர் மீது தலிபான்கள் போர் தொடுக்க முயன்றால், தனது ஆதரவாளர்கள் போரிட தயாராக இருப்பதாகவும் அஹமத் மசூத் கூறினார். அதேபோல் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்தும், தலிபான்கள் பாஞ்ஷிர் பகுதியில் உள்ளவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தநிலையில் 40 பேரை கொண்ட தலிபான் தூதுக்குழு, எதிர்ப்பு குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையின் முடிவு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தலிபான் எதிர்ப்புக்குழு, "இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று அவர்கள் கோரசன் மக்களின் மதிப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் அல்லது எதிர்ப்பு அறிவிக்கப்படும்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.