ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்தநாட்டில் தங்கள் ஆட்சியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க இராணுவம் ஆப்கானை விட்டு முழுமையாக வெளியேறியுள்ள நிலையில், இன்று தலிபான்கள் தாங்கள் நிறுவப்போகும் ஆட்சி குறித்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் ஈரான் நாட்டு பாணியிலான அரசாங்கத்தை நிறுவ தலிபான்கள் திட்டமிட்டுள்ளதாகவும், தலிபான் இணை நிறுவனர் அப்துல் கனி பராதர் தலிபான் அரசின் தலைவராக இருப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்துல் கனி பராதருக்கு மேலான பொறுப்பில் தலிபான்களின் உச்சபட்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாடா இருப்பார் எனவும் அத்தகவல்கள் கூறுகின்றன.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், புதிய ஆட்சி குறித்த அறிவிப்பு வெளியாவதை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் தலிபான்கள் பேனர்களை வைத்துள்ளனர். சுவர்களில் கோஷங்களை எழுதி வருகின்றனர். அதேபோல் நகரம் முழுவதும் கொடிகளை ஏற்றி வருகின்றனர். காபூலில் அமையும் அரசு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியாகவுள்ளதையொட்டி தலிபான்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.