- தெ.சு.கவுதமன்
கடந்த 2018 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்கான பாடலைப் பாடியவர்களில் ஒருவரான பிரபல பாப் பாடகி லேடி காகாவின் வளர்ப்பு நாய்களைத் திருடிய நபருக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி நீதிமன்றம், 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஃப்ரெஞ்ச் புல்டாக் வகை நாய்க்குட்டிகளுக்கு மவுசும் விலையும் அதிகம். இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதானால் நாய் ஒன்று 75,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகக்கூடியது. இந்த வகை நாய்கள் பெரிய பெரிய மில்லியனர்கள் வீடுகளில் மட்டுமே அவ்வளவு விலை கொடுத்து வாங்கி வளர்க்கப்படுகின்றன. இவற்றின் விலை காரணமாக, இவற்றைத் திருடி விற்பதற்கென்று திருட்டுக்கும்பல்களும் உண்டு.
பிரபல பாடகி லேடி காகா தனது வீட்டில் ஆசியா, கோஜி, கஸ்டவ் என மூன்று ஃப்ரெஞ்ச் புல்டாக் வகை நாய்க்குட்டிகளை வளர்த்துவருகிறார். அந்த நாய்க்குட்டிகளைப் பராமரிப்பதற்கென ரேயான் பிஷ்சர் என்ற ஊழியர் ஒருவரை நியமித்துள்ளார். அவர் வழக்கம்போல், 2021 பிப்ரவரி 24ம் தேதி அதிகாலையில், லேடி காகாவின் வீட்டருகே, பெர்னாண்டோ பள்ளத்தாக்கு பகுதியில் வாக்கிங் அழைத்துச் சென்றபோது, ஜேம்ஸ் ஹோவர்ட் ஜாக்சன் என்பவர், அவரது இரண்டு நண்பர்களோடு சேர்ந்து அந்த நாய்களைத் திருட முயன்றுள்ளார்.
ஹோவர்ட் ஜாக்சன் வாக்கிங் செல்லும் பாதையிலேயே காரில் பின் தொடர்ந்து சென்றவர்கள், திடீரென காரிலிருந்து இறங்கி இரண்டு நாய்க்குட்டிகளை முதலில் பிடித்து காருக்குள் திணித்தனர். உடனே அவர்களை ரேயான் பிஷ்சர் தடுக்க முயலவே, அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவரது நெஞ்சின் ஓரத்தில் துப்பாக்கிக் குண்டு பாய, அலறித் துடித்தபடியே "யாராவது உதவுங்கள்... என்னைச் சுட்டுவிட்டார்கள்... நாய்களைக் கடத்திச் செல்கிறார்கள்" என்று கதறியிருக்கிறார். நிலைமை விபரீதமானதால், இரண்டு நாய்க்குட்டிகளோடு அவர்கள் எஸ்கேப்பானார்கள். ஆனால், இந்த திருட்டுச் சம்பவம் முழுவதும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிஷ்சர், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார். அவர்மூலமாக, லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போதுதான் கடத்தப்பட்ட நாய்க்குட்டிகள், பிரபல பாடகி லேடி காகாவுக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது. உடனே காவல்துறையினர் நாய்களைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்துத் தேடியதில், ஜெனிபர் மெக்ப்ரைட் என்ற பெண்மணி, காணாமல்போன இரண்டு நாய்க்குட்டிகளையும் தானாகவே கொண்டு வந்து ஒப்படைத்ததோடு, தனக்கும் இந்த திருட்டுக்குமுள்ள தொடர்பை ஒப்புக்கொண்டார். அவர்மூலமாக, திருடர்கள் மூவரும் போலீசில் பிடிபட்டனர்.
இதுதொடர்பான வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி நீதிமன்றத்தில் நடைபெற்றதில், விசாரணை முடிந்து தீர்ப்பளித்த நீதிபதிகள், முக்கிய குற்றவாளியான ஜாக்சனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தனர். அவருடன் வந்தவர்களான ஜெய்லின் வொய்ட் மற்றும் லாஃபயெட்டி வேலே என்ற இருவருக்கும் முறையே 6 ஆண்டுகள், 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நாய்க்குட்டிகளைத் திருடியதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? பிரபலமானவங்க வீட்டு நாய்க்குட்டிகள்னா சும்மாவா பாஸ்?!