இந்தோனேசியாவில் கடந்த சில வருடங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் இது ரிக்டர் அளவில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 44 பேர் பலியாகியுள்ளதாகவும், 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாகவும், மக்கள் வீடுகள் இன்றி சாலையோரங்களில் தவிப்பதாகவும் அந்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக சியாஞ்சுர் நகரம் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிவிரைவு மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இறப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கருதப்படுகிறது. பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையிலும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் அரசு சார்பில் வெளியிடப்படவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் உலக நாடுகளின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.