கத்தார் நாட்டில் எட்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடற்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் எட்டு பேர் கத்தார் நாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர். தனிமைச் சிறையில் வைக்கப்பட்ட எட்டு பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இவர்கள் இஸ்ரேல் நாட்டுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ரகசியமாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் எட்டு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட இருப்பதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் இந்திய வெளியுறவுத்துறைக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விவரங்களை அறிந்து அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
கடந்த வருடம் புதிய நீர் மூழ்கிக் கப்பல் தயாரிக்கும் திட்டத்தை கத்தார் நாடு செயல்படுத்தி இருந்தது. அங்கு தயாரிக்கப்பட இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஜெர்மன் நாட்டின் தொழில்நுட்பத்துடன் சேர்த்து வடிவமைக்கப்பட்டு கத்தார் நாட்டின் கப்பல் படைக்காக உருவாக்கப்பட இருந்தது. இந்த வடிவமைப்பு பணிகளில் ஈடுபட்ட நிறுவனங்களில் ஒன்று 'அல்தாரா'. இந்த நிறுவனம் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 75 பேரை பணியில் அமர்த்தியிருந்தது. இந்த 75 பேரில் முன்னாள் இந்திய வீரர்கள் எட்டு பேர் இஸ்ரேல் நாட்டுக்காக உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்து கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்துள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. குற்றச்சாட்டில் சிக்கிய அல்தாரா நிறுவனமும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.