ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நேற்று (04.10.2021) இரவு திடீரென முடங்கின. தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இச்செயலிகள் முடங்கிப் போனது. இதனால் அதைப் பயன்படுத்தும் பயனாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் மற்ற சமூக வலைத்தளங்களை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே, இன்று அதிகாலை 4 மணிக்குத் தொழில்நுட்ப பிரச்சனை அனைத்தும் சரிசெய்யப்பட்டு இந்த மூன்று வலைத்தளங்களும் பயன்பாட்டிற்கு வந்தன.
ஃபேஸ்புக் குழுமத்தில் உள்ள வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் சேவை கிட்டத்தட்ட 6 மணிநேரம் தடைப்பட்ட நிலையில், இந்த தொழில்நுட்ப கோளாறு முடக்கத்தால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஸூக்கர்பெர்க்கின் சொத்துமதிப்பில் 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் 5 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் மார்க். அமெரிக்க பங்குசந்தைகளில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவிகிதம் சரிந்தது. அதேபோல் விளம்பர வருவாயும் ஒருமணிநேரத்திற்கு 7 கோடி ரூபாய் வீதம் 6 மணி நேரத் தடையால் 42 கோடி வருவாயை இழந்துள்ளது ஃபேஸ்புக்.
இந்த திடீர் முடக்கத்திற்கு முன்பு மார்க் ஸூக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3 ஆவது இடத்திலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.