சிங்கப்பூரில் இவ்வாண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாய் தொடர்ந்து ஆய்வகத்தில் வளர்க்கப்படும் ஆண் கொசுக்களின் உற்பத்தியைத் துரிதப்படுத்த சிங்கப்பூர் அரசு முடிவெடுத்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இவ்வாண்டு தொடக்கம் முதல் டெங்கு பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. மலேசியாவில் கடந்த மே மாதம் வரையில் 12,000 பேருக்கும், சிங்கப்பூரில் இதுவரை 14,000 பேருக்கும் டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 35 சதவீதம் அதிகமாகும். இதில், ஏடிஸ் எனும் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கொசுக்களை வைத்து கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைக் கடந்த சில ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தி வருகிறது சிங்கப்பூர்.
ஏடிஸ் கொசு எனப்படும் இவ்வகை ஆண் கொசுக்களை ஆய்வகத்தில் பிரத்தியேகமான சூழலில் வளர்த்து, அக்கொசுக்களின் உடலில் வோல்பேச்சியா என்ற பாக்டீரியா செலுத்தப்படுகிறது. இப்படி வளர்க்கப்பட்ட இந்த கொசுக்கள் நன்கு வளர்ந்த பிறகு தெருக்களில் விடப்படுகின்றன. அவை அங்குள்ள பெண் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்யும் போது, பாக்டீரியா பரவலின் காரணமாக பெண் கொசுக்களின் கருமுட்டைகள் குஞ்சு பொரிக்கத் தகுதியற்றவை ஆகின்றன.
இது கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, அவற்றின் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்த உதவுகிறது. அண்மைக்காலமாக இத்திட்டத்தின்படி, வாரத்திற்கு 20 லட்சம் கொசுக்களை சிங்கப்பூர் உற்பத்தி செய்துவந்தது. ஆனால், தற்போது அந்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகமாகியிருப்பதைத் தொடர்ந்து, இக்கொசுக்கள் உற்பத்தியை வாரத்திற்கு 50 லட்சமாக உயர்த்த சிங்கப்பூர் முடிவு செய்துள்ளது.