இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஏற்கனவே இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுப் பின்வாங்கப்பட்ட நிலையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நடத்திவந்த போராட்டத்தின் பலனாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவரது ராஜினாமா கடிதம் குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே என்ன முடிவெடுப்பார் என்ற யூகங்கள் அங்கு கிளம்பியுள்ளது. நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசை உருவாக்குவது தொடர்பான அம்சங்கள் இடம்பெற்ற நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் புதிய இடைக்கால அரசு நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இலங்கை அரசிற்கு எதிராக போராடியவர்கள் மீது ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் குண்டர்களை வைத்து தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். மஹிந்த ராஜபக்சே ராஜினாமாவைத் தொடர்ந்து கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் எனக் கோரி மக்கள் போராட்டம் தொடர்ந்து நீடிப்பதால் தாக்குதல், துப்பாக்கிச் சூடு என கூடுதல் பதற்றம் கண்டுள்ளது இலங்கை.