சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது முன்னாள் கணவருக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில், அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த நபர், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பெண் 5 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது கணவனை விவாகரத்து செய்துள்ளார். தற்போது மீண்டும் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதால், அவரைத் திட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார் என்பது தெரிய வந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஜெட்டா குற்றவியல் நீதிமன்றம், அந்தப் பெண்ணுக்கு 3 நாட்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. உலகில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளை ஒப்பிடுகையில், சவுதி அரேபியாவில் பெண்களுக்கான உரிமைகள் என்பது மிகவும் குறைவு. வாகனம் ஓட்டவும், விளையாட்டு மைதானங்களுக்கு சென்று போட்டிகளை காணவும் சமீபத்தில் தான் சவூதி அரேபியா மன்னர் அனுமதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.