Skip to main content

ரன்வேயில் திடீரென தீப்பற்றி எரிந்த விமானம்; ஜப்பானில் மீண்டும் பரபரப்பு

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
The plane suddenly caught fire on the runway in japan

புத்தாண்டு தினத்தில் (01-01-24) ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி அலைகளால் 2 பேர் பலியானதாகவும், 30 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனையடுத்து, நிலநடுக்கம் காரணமாக இன்று (02-01-24) காலை வரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரே நாளில் மட்டும் 155 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டன. இந்த நிலையில், விமானம் ஒன்று தரையிறங்கும் போது மற்றொரு விமானம் மீது பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. 

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (02-01-24) ரன்வேயில் தரையிறங்கி கொண்டிருந்தது. அப்போது, கடலோர காவல்படையின் விமானம் மீது மோதி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் துணையுடன் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

விபத்துக்குள்ளான விமானத்தில் சுமார் 400 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். புத்தாண்டு தினத்தில் நாட்டையே உலுக்கிய நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்