ஐஸ் பக்கெட் சேலஞ்சை துவக்கி வைத்தவர்களில் ஒருவரான பீட் ஃப்ரேட்ஸ் கடந்த ஆண்டின் இறுதியில் மரணமடைந்த நிலையில், மற்றொருவரான பேட்ரிக் க்வின் நேற்று மரணமடைந்தார்.
சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதும் 'சேலஞ்ச்' என்ற பெயரில் தினமும் புதியபுதிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகின்றன. அந்தவகையில், சில வருடங்களுக்கு முன்னர், 'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்' எனும் பெயரில் சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. அதாவது, வாளியில் நிரப்பப்பட்ட குளிர்ந்த நீரை தன் உடலில் கொட்டிக்கொள்வதே இந்த சேலஞ்ச்சின் அடிப்படையாகும். பின்னர் இது லூ கெஹ்ரிக் என்ற கொடிய நரம்பியல் நோய்க்கு எதிரான ஆராய்ச்சிக்காக நிதி திரட்டும் முயற்சி எனத் தெரியவந்தது. இதன் உள்ளார்ந்த அர்த்தம் தெரியவந்ததும், பலரும் ஐஸ் பக்கெட் சேலஞ்ச்சில் ஈடுபட்டு நிதி திரட்டுவதில் தங்கள் பங்களிப்பை அளித்தனர்.
இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்ச்சை துவக்கி வைத்தவர்களில் ஒருவரான பேட்ரிக் க்வின் நேற்று மரணமடைந்தார். கடந்த 7 ஆண்டுகளாக, 'லூ கெஹ்ரிக்' எனும் நோயினால் பாதிக்கப்பட்டு வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியை அவரது ஆதரவாளர்கள் ஃபேஸ்புக் வாயிலாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பேட்ரிக் க்வின் குடும்பத்தினருக்குப் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
பீட் ஃப்ரேட்ஸ் மற்றும் பேட்ரிக் க்வின் இருவரும் இந்த நோயினால் மரணமடைந்தாலும், இவர்கள் எடுத்த முன்னெடுப்புதான் இந்த நோய்க்கு எதிரான ஆராய்ச்சியை நோக்கி, பலரது கவனத்தைத் திருப்பியது குறிப்பிடத்தக்கது.