நடுவானில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக இளைஞர் ஒருவர் கூறிய சம்பவம் விமான பயணிகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியது. கனடாவின் டொராண்டோ நகரில் இருந்து மோண்டேகே நகருக்கு விமானம் ஒன்று 200 பயணிகளுடன் நேற்று புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது இருக்கையில் இருந்து எழுந்த ஒரு இளைஞர் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விமானத்தில் இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
மேலும், விமான பணிப்பெண்கள் அவருக்கு முக கவசங்களை கொடுத்து விமானத்தின் பின்புறம் உள்ள இருக்கையில் அமர சொல்லியுள்ளனர். விமானம் தரையிறங்கியதும் அனைத்து பயணிகளையும் பத்திரமாக இறங்கிய பின்பு மருத்துவக்குழு ஒன்று விமானத்தில் ஏறி அவரிடம் மருத்துவ சோதனை செய்ய முயன்றுள்ளது. ஆனால் தான் பொய் சொன்னதாகவும், தனக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், காவல்துறையினரிடம் அவரை ஒப்படைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.