உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கி இருக்கும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர். குறிப்பாக, உக்ரைனில் இருக்கும் செர்னோவில் அணு உலையை ரஷ்யப் படைகள் பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் கிழக்கு பகுதியில் போர் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 80- க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை தாக்கி அளித்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்திருக்கிறது. உக்ரைன் எல்லைக்குள், வான், கடல், சாலை என மூன்று வழியாக நுழைந்த ராணுவ வீரர்கள், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தாக்குதலை நடத்த ஆரம்பித்தனர்.
இந்த தாக்குதலின் போது, 11 விமான தளங்கள் உள்பட 80- க்கும் மேற்பட்ட ராணுவ தளங்கள் தாக்கி அளிக்கப்பட்டதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு பெலாரஸ் வழியாகவும், ரஷ்ய விமானப் படைகள் முன்னேறியதில் செர்னோபில் உள்ள அணு உலை ரஷ்யா வசம் வந்துள்ளது. 36 ஆண்டுகளுக்கு முன், இந்த அணு உலையில் ஏற்பட்ட வரலாற்று பேரழிவால், அங்கு இன்றைய தேதி வரை அணுக் கதிர்வீச்சும் பரவலாகக் காணப்படுகிறது.
தற்போது ரஷ்யா வசம் இந்த அணு உலை சென்றிருப்பதால், அதன் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளதாக உக்ரைன் கவலைத் தெரிவித்துள்ளது. அணு கழிவுகள், அணு பாதுகாப்பு மையங்களின் நிலைமை பற்றி எந்த தகவலும் இல்லை என்று கூறியுள்ளது. அதேநேரம், ரஷ்யப் படை வீசிய குண்டு கதிர்வீச்சு கழிவுகள் மீதும் விழுந்ததாகவும், இதனால் அப்பகுதிகளில் கதிர்வீச்சின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், ரஷ்யப் படைகளின் அடுத்த இலக்கு தலைநகர் கீவ் தான் என்றும் செர்னோபில் அணு உலை அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 130 கி.மீ. தூரம் மட்டுமே இருப்பதால், ரஷ்யப் படைகள் எளிதாக தலைநகரைப் பிடித்துவிடும் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, போரில் இதுவரை பொதுமக்கள் ராணுவ வீரர்கள் என 137 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 169 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உக்ரைன் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.