
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் இன்று (09.05.2023) இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்கு ஆஜராக வந்த நிலையில் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் வைத்து இம்ரான் கானை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் அதிரடியாக கைது செய்தனர்.
பாகிஸ்தான் ராணுவம் குறித்து அவதூறாகப் பேசியது உட்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இந்த கைது சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பே, இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அப்போது நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அவரை கைது செய்யும் முடிவானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் பலவேறு இடங்களிலும் அவரது கைதுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அங்கு சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் கைது சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் பதற்றமான சூழலையும் ஏற்படுத்தி உள்ளது.