Skip to main content

கரோனா தடுப்பு... வெற்றிக்கு மிக அருகில் மற்றொரு நாடு...

Published on 17/06/2020 | Edited on 17/06/2020

 

no new cases in 24 days at thailand

 

கடந்த 24 நாட்களாக புதிய கரோனா தொற்றோ, அல்லது இறப்போ இல்லாத நாடாக மாறியுள்ளது தாய்லாந்து.

 

உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸால் இதுவரை 82 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், நான்கு லட்சத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில் கரோனாவைக் கட்டுப்படுத்த மருந்து கண்டறியும் பணிகள் பல நாடுகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதேநேரம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில் பின்லாந்து, ஜெர்மனி, நார்வே உள்ளிட்ட நாடுகள் குறிப்பிடத்தகுந்த வெற்றியையும் பெற்றுள்ளன. குறிப்பாக நியூஸிலாந்து நாட்டின் கடந்த நான்கு வாரங்களில் இருவருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவை மிகச்சிறப்பாகக் கையாண்டு கட்டுப்படுத்தியதாக உலக நாடுகள் பலவும் நியூஸிலாந்து நாட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், நியூஸிலாந்தை போலத் தாய்லாந்தும் கரோனா தடுப்பில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுள்ளது.

 

கடந்த மார்ச் மாதம் அந்நாட்டில் கரோனா தொற்றுக் கண்டறியப்பட்ட உடனேயே, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, சோதனை எண்ணிக்கையிலும் அதிகப்படுத்தப்பட்டன. மேலும், சுற்றுலாத்துறையைப் பெருமளவு நம்பியுள்ள அந்த நாடு, ஜூன் இறுதி வரை வெளிநாட்டிலிருந்து விமானங்கள் வரவும் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளின் விளைவாக, கடந்த 24 நாட்களாக புதிய கரோனா தொற்றோ, அல்லது இறப்போ இல்லாத நாடாக மாறியுள்ளது தாய்லாந்து. இதுகுறித்து அந்நாட்டுச் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தாய்லாந்தில் கடந்த 24 நாட்களாக புதிய கரோனா தொற்றோ, இறப்போ உள்நாட்டில் ஏற்படவில்லை. சமீபத்தில் கண்டறியப்பட்ட தொற்றுகள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இதிலும் கடந்த மூன்று நாட்களில் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்