நேபாள நாட்டைச் சேர்ந்தவர் கே.பி.சர்மா ஒலி. ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவருக்கும், நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் அதிகாரப் போட்டி நடந்துவந்தது.
இந்நிலையில், இருவருக்கும் இடையேயான மோதல், அவசரச் சட்டம் விவகாரத்தில் பெரிதாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி.சர்மா ஒலி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இது புஷ்ப கமல் தஹால் குழுவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து புஷ்ப கமல் தஹால் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் கூடி, பிரதமர் கே.பி.சர்மா ஒலியை, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கியது. மேலும் ‘அரசியல் சாசனத்திற்கு எதிராக நீங்கள் எடுத்த முடிவிற்காக ஏன் உங்களைக் கட்சியில் இருந்து நீக்க கூடாது’ என விளக்கம் கேட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், அந்த நோட்டீஸிற்குப் பதிலளிக்காததல் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை கட்சியை விட்டு நீக்குவதாக, புஷ்ப கமல் தஹால் தலைமையிலான குழு அறிவித்துள்ளது.