தமிழக மீனவர்களுக்கு இலங்கை பகையாளி என்றாலும், பிரதமர் மோடிக்கு எப்போதுமே பங்காளி தான். பிரதமராக 2-வது முறை பதவியேற்ற பின்னர், முதல் வெளிநாட்டுப் பயணமாக நேற்று மாலத்தீவு சென்ற நரேந்திரமோடி, அங்கிருந்து நேராக இன்று (09-06-2016) காலை 11-00 மணிக்கு கொழும்பு சென்றடைந்தார். அவரை, கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமானநிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வரவேற்றார். அவருக்கு அப்போது சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
அங்கிருந்து நேராக அதிபர் மாளிகைக்கு செல்லும் வழியில், ஏப்.21-ந்தேதி வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை நரேந்திரமோடி பார்வையிட்டதுடன், அங்கு குண்டு வெடிப்பின்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது, அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை ரஞ்சித் ஆண்டகையிடம் தனது கவலையையும் மோடி தெரிவித்தார்.
பின்னர் அங்கிருந்து அதிபர் மாளிகைக்குள் பிரதமர் மோடியின் கார் நுழைந்தபோது, மழை பெய்யத் தொடங்கியது. வரவேற்க காத்திருந்த இலங்கை அதிபர் சிறிசேன, மோடிக்கு கறுப்பு குடை பிடித்து மாளிகைக்கு அழைத்து செல்லும் சேவகனாக மாறினார்.
குடைபிடித்து செல்லும் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மைத்ரி பால சிறிசேன "இலங்கைக்கு வருகை தந்தமைக்கு நன்றி. நீங்கள் (நரேந்திரமோடி)எங்களுடைய உண்மையான நண்பன் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். உங்களுடைய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை நான் மிகவும் பாராட்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
"தீவிரவாத அச்சுறுத்தலை முறியடிக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். தீவிரவாதம் என்பது கூட்டு அச்சுறுத்தல் எனவே, ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் அவற்றிற்கு எதிராக செயல்படவேண்டும்" என மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உரையாற்றியதையே, இலங்கை அதிபரிடம் எடுத்துக்கூறிய மோடி, பின்னர் கொழும்புவில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டார்.
இலங்கையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என ஏப்.04-ந்தேதியே இந்திய உளவுத்துறை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இதுபற்றி தமது கவனத்திற்கு கொண்டு வரவில்லை என அதிபர் மைத்ரிபால சிறிசேன ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், இலங்கையின் தேசிய உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் உளவுத்துறை எச்சரிக்கை குறித்து அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என கூறியிருந்தார்.
இதனை அதிபர் மறுத்து வந்த நிலையில், நேற்றிரவு சிசிரா மெண்டிஸ் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதாவது, நட்பு நாட்டின் பிரதமர் மோடி இலங்கைக்கு வந்தபோது, உளவுத்துறையின் எச்சரிக்கையை கோட்டை விட்டதற்கு பரிகாரம் தேடியிருக்கிறார் சிறிசேன.