ஐரோப்பிய நாடுகளில் ஒரு வார காலத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஐரோப்பிய வாழ் இந்தியர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
இந்நிலையில் பெல்ஜியம் நாட்டின் பிரஸெல்ஸ் என்னும் இடத்தில் ராகுல் காந்தி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவில் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் போன்ற செயல்களால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தவறான கொள்கையால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. தொழில்துறையில் சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
நாட்டின் 60 சதவீத மக்களின் உணர்வுகளை மத்திய பாஜக அரசு மதிக்கவில்லை. மணிப்பூரில் ஜனநாயக உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஜி20 மாநாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அழைக்கவில்லை. காஷ்மீரின் முன்னேற்றம், அமைதி மீது நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம். நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.