மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பகதூர் என்ற பாதுகாவலர் கொலை செய்யப்பட்டு, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது. அடுத்தக்கட்ட விசாரணை அக்டோபர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படை அதிகாரிகள், கோடநாடு பங்களாவுக்குச் சென்று விசாரணை செய்துவருகிறார்கள்.
அதேபோன்று இந்த வழக்கு சம்பந்தமான சாட்சிகளிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவரும் நிலையில், நேற்று (13.09.2021) இந்த வழக்கின் 4வது குற்றவாளியான ஜம்சீர் அலியிடம் காவல்துறையினர் 8 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிறையில் உள்ள இரண்டாவது குற்றவாளி வாளையார் மனோஜுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையைத் தளர்த்தி, ஜாமீனில் விடுவிக்க உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.