அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல் சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். அண்மையில் ஏவுகணைகளை வீசி கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.
கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவில் வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் வெளி உலகத்திற்கு கசிந்து விடக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வடகொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது.
இந்நிலையில் போருக்கு எப்போதும் தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்திற்கு கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'கிம் ஜாங் உன்-2' என்ற அரசியல் மற்றும் ராணுவத்திற்கான பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து கிம் ஜாங் உன், நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் அரசியல் சூழ்நிலை, நிலையாக இல்லாதது குறித்து பேசியதோடு, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எப்போதும் இல்லாத அளவிற்கு வடகொரியா ராணுவத்தினர் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 'கிம் ஜாங் உன்-2' பல்கலைக்கழகத்தில் அவர் ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.