அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடையேயான உறவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதலே சீனாவிற்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதில் சீனா அதிபருடனான தனது முதல் தொலைபேசி உரையாடலிலேயே, சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை தெரிவித்தது முதல் அண்மையில் கரோனா வைரஸ் தோற்றம் குறித்து 90 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உளவுத்துறையினருக்கு உத்தரவிட்டது வரை அடங்கும்.
இந்தநிலையில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வழியில் சீனா நிறுவனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார் ஜோ பைடன். அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், கடந்தாண்டு நவம்பர் மாதத்தில், சீனா இராணுவத்திற்கு பாதுகாப்பு எந்திரங்களை வழங்குவதாக அல்லது சீனா இராணுவத்திற்கு ஆதரவளிப்பதாக கருதப்பட்ட 31 நிறுவனங்களில் அமெரிக்கர்கள் பங்குகள் வாங்குவதை தடை செய்திருந்தார்.
தற்போது ஜோ பைடன் மேலும் 28 நிறுவனங்களில் அமெரிக்கர்கள் பங்குகள் வாங்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் மொத்தம் 59 சீனா நிறுவனங்களில் பங்குகள் வாங்க அமெரிக்கர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக மதிப்புகளை குன்றச் செய்யும் வகையில் அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களை செய்ய சீனா கண்காணிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. தற்போது குறிவைக்கப்பட்ட நிறுவனங்கள், அந்த தொழில்நுட்பத்தில் தொடர்புள்ளவை என அமெரிக்கா கூறியுள்ளது.
ஏற்கனவே ட்ரம்ப் விதித்த தடையை கண்டித்து வரும் சீனாவிற்கு, ஜோ பைடன் விதித்துள்ள தடை மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது.