ஜப்பான் நாடாளுமன்றத்தில் நடைபெற இருந்த பட்ஜெட் கமிட்டி கூட்டத்திற்கு ஒலிம்பிக் போட்டிகளுக்கான அமைச்சர் சகுராடா மூன்று நிமிடங்கள் தாமதமாக வந்தார். இதற்காக பகிரங்கமாக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் அமைச்சர் தாமதமாக வந்து, அவர் ஏற்றுக்கொண்ட பதவிக்கு அவமரியாதை செய்துவிட்டார் எனக்கூறி, எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கெடுக்காமல் ஐந்து மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை இல்லை. இதற்கு முன், ரிகாகோ ஐகீ என்ற ஜப்பானிய நீச்சல் வீராங்கனை ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்கு கருத்து கூறிய சகுராடா இவ்வாறு தெரிவித்தார். "ரிகாகோ பதக்கம் வெல்லக்கூடிய வீராங்கனை, அவர் மீது நாங்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளோம். நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துவிட்டேன்... இது அப்போது சர்ச்சையானது. அதன்பின் இப்படி கூறியதற்காக மன்னிப்பு தெரிவித்தார்.
கடந்த வருடம் சைபர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இவர் இருந்தார். அப்போது அவர், தான் கணிணியை பயன்படுத்தியதே இல்லை என்றும், தனது உதவியாளர்கள்தான் அதை செய்வார்கள் என்றும் தெரிவித்தார். சைபர் பாதுகாப்பு துறை அமைச்சர் கணினியை பயன்படுத்தவே இல்லையா என அப்போதும் சர்ச்சைகள் உருவாகின. இப்படி தொடர்ந்து சர்ச்சையை கிளப்பிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் சகுராடா. சகுராடா பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.