சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் அந்த நாட்டின் மன்னரையும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்துவந்தார். இந்நிலையில் இவர், கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பல சர்ச்சைகள், ஆதாரங்கள் எல்லாம் வெளிவந்த பிறகு, சவுதி அரேபியா அரசு கொலை செய்ததை ஒப்புக்கொண்டது. அதன் பின் அதுதொடர்பாக 18 பேரை சவுதி அரேபியா கைது செய்தது. மேலும், அதில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் சவுதி அரேபியா அரசு தெரிவித்தது.
இதன்பிறகு அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், "சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கைதுசெய்ய அல்லது கொலை செய்ய துருக்கியின் இஸ்தான்புல்லில் ஒரு நடவடிக்கைக்கு சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக நாங்கள் கருதுகிறோம். அவர் பச்சைக்கொடி காட்டாமல், இந்தக் கொலை நடக்க சாத்தியமில்லை. ஜமால் கஷோகி கொல்லப்பட்ட விதம், அதிருப்தியாளர்களை அமைதியாக்க, வன்முறைக்கு ஆதரவளிக்கும் இளவரசரின் நடவடிக்கைக்குப் பொருந்துவதுபோல் உள்ளது" என கூறியிருந்தது.
இந்தநிலையில் ஜமால் கஷோகியை கொன்ற குழுவில் இடம்பெற்றிருந்த நால்வர், அமெரிக்காவில் துணை இராணுவத்திற்கான பயிற்சியைப் பெற்றவர்கள் என தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் தனியார் பாதுகாப்பு குழுவான டையர் 1 (tier 1) குழுவிடம் அவர்கள் பயிற்சி பெற்றதாக தெரிவித்துள்ள பத்திரிகை நிறுவனம், அதற்கு சான்றாக டையர் 1 நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'செர்பரஸ் கேபிடல் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தின் உயர் அதிகாரி ட்ரம்ப் நிர்வாகத்திடம் அளித்த ஆவணத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது.
தி நியூயார்க் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ள அந்த ஆவணம் லூயிஸ் பிரேமர் என்பவருடையதாகும். அதில் லூயிஸ் பிரேமர் சவுதி வீரர்களுக்குப் பயிற்சி அளித்ததை உறுதிபடுத்தியுள்ளார். அதேநேரத்தில் அந்தப் பயிற்சி அதன்பின் நடந்த கொடூர சம்பவங்களுடன் தொடர்பில்லாதது என தெரிவித்துள்ளார். இது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தி நியூயார்க் டைம்ஸின் இந்த செய்தி குறித்து பதிலளிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை மறுத்துவிட்டது. அதேநேரத்தில் அமெரிக்க இராணுவ உபகரணங்களையும் பயிற்சிகளையும் பொறுப்பாக பயன்படுத்த வேண்டும் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.