ஊரடங்கு காரணமாக 1,200 கிலோமீட்டர் தூரம் தனது தந்தையைச் சைக்கிளில் வைத்து சொந்த ஊருக்கு அழைத்துவந்த சிறுமியைப் பாராட்டிய இவான்காவிற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
பீகாரைச் சேர்ந்த மோகன் ஹரியானா மாநிலத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அவருக்குச் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் காலில் அடிபட்டு நடக்க முடியாமல் இருந்துள்ளார். உடல்நிலை குன்றியிருந்த தந்தையை அவருடைய மகள் ஜோதி பராமரித்து வந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் அங்கே இருந்து சிரமப்படுவதைக் காட்டிலும் சொந்த ஊரான பீகாருக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்த அவர்கள், சைக்கிளில் 1,200 கிலோ மீட்டர் பயணம் செய்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இந்தச் செய்தி தற்போது இந்தியா முழுவதும் ஆச்சரியமாகப் பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜோதிக்கு சில தேர்வுகள் வைத்து சைக்கிளிங் பெடரேசனில் பயிற்சியாளராக மாறும் தகுதி உள்ளதா என்ற சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள இவான்கா ட்ரம்ப், "15 வயது ஜோதி குமாரி, தனது காயமடைந்த தந்தையை 7 நாட்களில் 1,200 கி.மீ தூரம் தனது சைக்கிளின் பின்புறத்தில் வைத்து தங்கள் சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார். சகிப்புத்தன்மை மற்றும் அன்பின் இந்த அழகான சாதனை இந்திய மக்களின் கற்பனையையும் சைக்கிள் கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பதிவு கலவையான பதில்களைப் பெற்று வருகிறது. ஒருசிலர் சிறுமிக்குப் பாராட்டுத் தெரிவித்ததற்கு ஆதரவாகவும், மற்றொரு சாரார், இந்தியாவின் அவலநிலையை இவான்கா கிண்டலடிப்பது போல இந்தப் பதிவு உள்ளதாகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இது மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம் அல்ல எனவும், இந்தியாவில் தொழிலாளர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதைக் காட்டுவதாகவே இதனைக் கருத்தில்கொள்ள வேண்டும் எனவும் இவான்காவுக்கு பதிலளித்து வருகின்றனர்.