Skip to main content

தைவானுக்கு உறுதியளித்த அமெரிக்கா; அதிர்ச்சியில் சீனா!

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

china taiwan america recent international issue 

 

சீனா தைவான் நாட்டை தங்களது நாட்டின் ஒரு பகுதி என கூறி வருவதுடன் அதனை நிர்வாகரீதியில் தங்களுடன் இணைக்கும் முனைப்பில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

இதற்கிடையில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது நாட்டின் முக்கியத் தலைவர்களை அங்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில் முன்பு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அப்போதைய சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி என்பவரை தைவான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்போது தைவான் கடல் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்துவது போன்ற பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் தற்போதைய அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்திப்பதற்காக தைவான் அதிபர் சாய் இங்வென் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதனை அறிந்த சீனா இவர்களின் இந்த சந்திப்பு நடைபெறக் கூடாது என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும், சீனாவின் எதிர்ப்பையும் மீறி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நூலகத்தில் தைவான் அதிபர் சாய் இங் வென், கெவின் மெக்கார்த்தி ஆகிய இருவரும் சந்தித்து பேசினர்.

 

அப்போது தைவான் மீதான சீனாவின் அச்சுறுத்தலை தைவான் அதிபர் ஒப்புக்கொண்டதாகவும் தைவானுக்கு முழு ஆதரவை அமெரிக்கா வழங்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தைவான் கடல் பகுதியில் சீனா மற்றும் அமெரிக்கா சார்பில் போர்க்கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது போர் பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த செயலானது சீனாவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்