ஈரான் ராணுவ அதிகாரி சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்குக் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது ஈரான்.
கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் தேதி அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்குக் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது ஈரான்.
"பாக்தாத்தில் ஜெனரல் சுலைமானியை கொன்ற 'ஜனவரி 3 தாக்குதல்' நிகழ்வில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ட்ரம்ப் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றங்களுக்கான பிரிவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெஹ்ரான் வழக்கறிஞர் அலி அல்காசிமெர் கூறினார். மேலும், ட்ரம்ப்பின் அதிபர் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் ஈரான் இந்த வழக்கைத் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில், ஈரான் இன்டர்போலின் உதவியை நாடியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ட்ரம்ப்புக்கு எதிராக 'சிகப்பு நோட்டீஸ்' பிறப்பிக்க ஈரான் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.