
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார்.
அதன்படி பிரதமர் மோடி இந்த பாலத்தை வரும் ஏப்ரல் 6ஆம் தேதி (06.04.2025) திறந்து வைக்க உள்ளார். இதற்காகச் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை பார்வையிட செல்வதாக கூறி டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அன்று மாலையே பாஜக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இருந்தது பேசுபொருளாகி இருந்தது. இதனால் அதிமுக-பாஜக இடையே மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தமிழகம் வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் மோடி தரப்பில் அனுமதி கொடுக்கப்பட்டால் மதுரை விமான நிலையத்திலேயே இந்த சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.