இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே நடைபெற்று வரும் தாக்குதலானது கடந்த ஐந்து நாட்களாக நீடித்து வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் நிதி ஆதாரங்களை, தாங்கள் முடக்கி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் இரு தரப்பிலும் சுமார் 2,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் இருக்கும் கட்டிடங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் இணையவழி பண பரிமாற்றங்களை முடக்கியுள்ளதாகவும் இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஹமாஸின் கிரிப்டோகரன்சி தளத்தையும் முடக்கியுள்ளதாகவும், தங்களின் இந்த நடவடிக்கைகளால் ஹமாஸின் 90% நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் விளக்கம் கொடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பைப் பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டுக்கான அவர்களின் நிதி நிலவரப்படி இந்திய மதிப்பில் 582 கோடி அளவிற்கான பணப்பரிவர்த்தனை இருந்தது. அதனால்தான் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்கள் வாங்கும் அளவுக்கு பலம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் பணப்பரிவர்த்தனையை முடக்கி பலவீனமாக்க, இந்த புது முயற்சியை இஸ்ரேல் எடுத்துள்ளது.