ஈரான் நாட்டில் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது இளம்பெண் ஒருவரின் மரணம்.
சஹர் கோடயாரி என்ற அந்த 28 வயது பெண் ஈரான் நாட்டின் பெண்கள் உரிமைக்காக போராடியபோது, இஸ்லாமிய மரபுகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திலேயே தீக்குளித்தார் சஹர். இப்படி அவர் உயிரைவிட்டு போராடியது, பெண்களும் கால்பந்து மைதானத்திற்கு சென்று நேரில் போட்டிகளை பார்க்க வேண்டும் என்பதற்காகவே.
ஈரான் நாட்டில் 1981-ம் ஆண்டு முதல், பெண்கள் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து விளையாட்டை ரசிப்பதற்கு தடை இருக்கிறது. ஆரம்பகாலம் முதல் இதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு இருந்தாலும், சமீபத்தில் ஈரான் அரசின் இந்த சட்டத்திற்கு எதிரான விமர்சனங்கள் அதிகமாயின. இந்த நிலையில், இதற்காக போராடிய சஹர் கோடயாரி அந்நாட்டு மக்களால் 'புளு கேர்ள்' (அவருடைய விருப்பமான கால்பந்தாட்ட அணியின் சீருடை நிறம்) என்று அழைக்கப்பட்டார்.
சஹர் கோடயாரி, கடந்த மார்ச் மாதம் ஆண் வேடமிட்டு மைதானத்துக்குள் நுழைய முயன்றபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் 6 மாதங்கள் நடந்த இந்த வழக்கின் முடிவில், அவருக்கு 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று தெரியவந்தது. இந்தநிலையில் நீதிமன்ற வளாகத்திலேயே அவர் தீக்குளித்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.
இந்த இறப்பு அந்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சஹரின் மரணத்துக்குப் பிறகு விளையாட்டு மைதானங்களில் பெண்களை அனுமதிக்கக் கோரிய போராட்டம் வலுப்பெற்றது. இது உலக நாடுகள் பலவற்றிலும் எதிரொலித்தது. சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பான பிஃபா அமைப்பும் மக்கள் பக்கம் நின்றது. இதனையடுத்து தற்போது வேறு வழியில்லாமல், அந்த சட்டத்தை நீக்குவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரானில் இனி நடைபெறும் கால்பந்தாட்ட போட்டிகளை அந்நாட்டு பெண்கள் மைதானங்களுக்கு சென்று காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.