எம்.வி.லைலா நார்ஃபோக் சரக்கு கப்பல் சோமாலிய பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட நிலையில், அதில் சிக்கி உள்ள 15 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், அந்த கப்பலில் என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து கவனிப்பதற்காக இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் சென்னை கப்பல் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை பின் தொடர்ந்து சென்றுள்ளது. தற்போது ஹெலிகாப்டர் மூலமாக இந்திய கடற்படை எம்.வி.லைலா நார்ஃபோக் கப்பலை நெருங்கி விட்ட நிலையில, சரக்கு கப்பலில் இந்திய கடற்படை இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடத்தல் நடத்திய கடற்கொள்ளையர்களுக்கு இந்திய கடற்படை கமாண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கப்பலை விட்டு சென்று விட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஒருவேளை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் கொடுப்பதற்கு இந்திய கடற்படை தயாராக உள்ளது. அதேபோல் சரக்கு கப்பலில் உள்ள 15 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் கடற்படை உறுதி செய்துள்ளது.