யூடியூப் பார்த்து பாப்கான் செய்ய முயற்சித்த 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவமும், அதற்கு சம்பந்தப்பட்ட யூடியூப் வீடியோ பதிவர் மன்னிப்பு கோரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீனாவை சேர்ந்த யா என்ற பெண் யூடியூப் எனப்படும் சமூக காணொளி வலைதளத்தில் பாப்கான் எப்படி தயாரிப்பது என்று வீடியோவை பதிவிட்டுள்ளார். காலியான பெப்சி டின் பாட்டிலை கொண்டு எப்படி பாப்கான் தயாரிப்பது என்ற வீடியோவை அவருடைய யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
சுமார் 4 கோடி பின் தொடர்பவர்களை கொண்டுள்ள அந்த யூடியூப் சேனலில் வெளியான அந்த வீடியோவை பார்த்த சேசே என்ற 14 வயது சிறுமி தனது தோழியுடன் சேர்ந்து அந்த வீடியோவில் குறிப்பிட்டது போன்று டின்னில் பாப்கான் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் ஆல்கஹால் டின்னை பயன்படுத்தியதால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 93 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இரண்டு வார சிகிச்சைக்கு பின் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். உடனிருந்த அவரது தோழி 13 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுமியின் இந்த உயிரிழப்புக்கு யூடியூபில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோ பதிவுதான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இதையடுத்து சிறுமியின் குடும்பத்துக்கு வீடியோவை வெளியிட்ட அந்த இளம்பெண் இழப்பீடு வழங்கியதோடு மன்னிப்பும் கோரியுள்ளார். எச்சரிக்கை வாசகம் வீடியோவில் குறிப்பிடப்படாதது தன்னுடைய தவறுதான் என்றாலும் சிறுமி தான் பதிவிட்ட வீடியோவில் உபயோகப்படுத்திய உபகரணங்களை பயன்படுத்தாமல் ஆல்கஹால் டின்னை பயன்படுத்தினால்தான் இந்த விபரீதம் நடந்திருக்கிறது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.