புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறுவது வழக்கம். அதுபோல வாழ்த்து கூறிய இருவருக்கு பதவியிறக்கம் மற்றும் சம்பள குறைப்பு ஆகியவை பரிசாக கிடைத்துள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹுவாய் கைபேசி நிறுவனத்தில் தான் இது நிகழ்ந்துள்ளது. ஹுவாய் ஊழியர்கள் இருவர் ஹுவாயின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து கூறும்போது அதனை ஐபோன் மெல்லாம் ட்வீட் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த ட்வீட்டை ஹுவாய் நிறுவனம் உடனடியாக நீக்கியது. எனினும் பதிவு தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டுகள் இணையத்தில் வைரலாகப் பரவின. இது குறித்து விளக்கமளித்துள்ள ஹுவாய் நிறுவனம், தொழிநுட்ப கோளாறு காரணமாக கணினியில் ட்வீட் செய்ய முடியவில்லை என அந்த ஊழியர்கள் ஐபோன் மூலம் ட்வீட் செய்ததாக கூறியுள்ளது. இதற்காக அவர்கள் இருவருக்கும் பதவியிறக்கம் மற்றும் 728 டாலர்கள் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.