கரோனா வைரஸ் தொற்றால் ஜெர்மன் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ள சூழலில், அந்நாட்டில் ஒரு மாநிலத்தின் நிதியமைச்சர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,21,412 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,004 பேர் குணமடைந்துள்ளனர், 33,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் ஜெர்மன் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ள சூழலில், அந்நாட்டின் ஒரு மாநிலத்தின் நிதியமைச்சர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஜெர்மன் நாட்டின் ஹெஸ்ஸி மாநிலத்தின் நிதியமைச்சர் தாமஸ் ஸ்காபர் (54). கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சராக இருந்து வந்த தாமஸ், கரோனா பாதிப்புக்குப் பிறகு தினமும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவரிடமிருந்து எந்த அறிவிப்பும் வராமல் இருந்தது. இந்தச் சூழலில் பிராங்ஃப்ர்ட மற்றும் மெயின்ஸ் நகரங்களுக்கு இடையிலான ரயில்வே பாதையில் தாமஸின் உடல் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ஜெர்மனி ஊடகம் ஒன்று, "ரயில்வே பாதையில் ஏதோ உடல் இருப்பதை முதலில் பாராமெடிக்கல் துறையைச் சேர்ந்தவர்கள் பார்த்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் வந்து காயங்களுடன் கிடந்த உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டதில் அது அம்மாநிலத்தின் நிதியமைச்சர் தாமஸ் என்பது தெரியவந்தது. தனக்கு நெருக்கமானவர்களிடம் கரோனா வைரசால் மாநிலத்தின் நிதிநிலை மோசமடைந்துவிட்டதாக வருத்தப்பட்டுள்ளார் தாமஸ். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தாமஸ் தற்கொலை செய்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த மக்கள் செல்வாக்கைப் பெற்ற தாமஸ் அடுத்துவரும் தேர்தலில் அம்மாநில முதல்வராக வாய்ப்பிருந்த சூழலில் தற்கொலை செய்துகொண்டுள்ளது ஜெர்மனியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.