இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் பொதுப்போக்குவரது முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தினமும் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் பெட்ரோல் பங்க்குகளில் மணிக்கணக்கில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. டீசல் தட்டுப்பாடு காரணமாக, பேருந்து சேவை முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
ஏற்கனவே, இலங்கையில் சுமார் 7 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில், எரிபொருள் தட்டுப்பாடு அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இரு சக்கர வாகனங்களும், கார்களும் பெட்ரோல் பங்க்குகளில் காத்திருப்பதால், நீண்டத் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுமே எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. தற்போது வரை 70% தனியார் பேருந்துகள் இயங்காத நிலையில், அடுத்த ஓரிரு நாட்களில் 90% பேருந்துகள் இயக்க முடியாத சூழல் உருவாகும் என்றும் பேருந்து உரிமையாளர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
இதனால் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அலுவலக பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் என அனைவரும் பெரிதும் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.