Skip to main content

இந்தியாவில் மாயமான வங்கதேச எம்.பி சடலமாக மீட்பு!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
Mysterious Bangladeshi MP recovered in India

வங்காள தேச நாட்டில் ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லீக் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியின் எம்.பியாக பொறுப்பு வகித்து வருபவர் அன்வருல் அசிம். 

இந்த நிலையில், அன்வருல் அசிம் கடந்த 12ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவுக்கு வந்து, பாராநகர் பகுதியில் தனது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். இதனையடுத்து, அடுத்த நாள் வெளியே சென்ற அன்வருல் அசிமி பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அசிமின் நண்பர், அவரின் செல்போன் எண்ணை தொடர்புகொண்டு அழைத்துள்ளார். ஆனால், எந்தவித பதிலும் வராததால், அதிர்ச்சியடைந்த அவரது நண்பர், இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். 

மேலும், இந்த சம்பவம் குறித்து வங்காளதேச தூதரகம் போலீசில் புகார் அளித்திருந்தது. அதன்படி, வங்காள தேச எம்.பி அன்வருல் அசிம்மை கண்டுபிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கி வந்தனர். இந்த நிலையில், கொல்கத்தா நியூ டவுன் பகுதியில் அன்வருல் அசிம் சடலமாக மீட்கப்பட்டார். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘நாங்கள் பலரை விசாரித்து, விரிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளோம், அதன் மூலம்தான் அவர் கொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்த முடியும்’ எனக் கூறுகின்றனர். மேலும், இது தொடர்பாக வங்காளதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கூறுகையில், ‘இதுவரை, சம்பந்தப்பட்ட கொலையாளிகள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இது திட்டமிட்ட கொலை. இதுவரை வங்கதேசத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இந்தியர் எவருக்கும் தொடர்பு இல்லாததால், இந்தியாவுடனான உறவில் மோசமடையும் வகையில் எதுவும் இங்கு நடக்கவில்லை’ என்றார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
West Bengal Kolkata Acropolis Mall incident

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அக்ரோபோலிஸ் மாலில் தீடிரென யாரும் எதிர்பாராத வேளையில் தீ விபத்து ஏற்பட்டது. 4 வது மாடியில் ஏற்பட்ட தீ மளமளவென பிறபகுதிகளுக்கும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டுள்ள வளாகத்தில் பலர் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கண்ணாடியால் அமைக்கபட்டுள்ள வணிக வளாகத்திற்குள் புகை மூட்டம் சூழ்ந்திருப்பதால் வளாகத்தை சுற்றிலும் உள்ளவர்களுக்கும் வளாகத்திற்குள் இருப்பவர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஜாதவ்பூர் பிரிவு போலீஸ் டிசிபி பிதிஷா கலிதா தாஸ்குப்தா கூறுகையில், “தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தச் சம்பவம் குறித்து எதுவும் கூற முடியாது” எனத் தெரிவித்துள்ளார். வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ரிமால் புயல்; களத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர்!

Published on 26/05/2024 | Edited on 26/05/2024
Remal Cyclon National Disaster Response Team in the field

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ரிமால் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது வங்காள தேசம் மற்றும் அதையொட்டிய மேற்குவங்க மாநில கடற்கரை இடையே இன்று (26.05.2024) நள்ளிரவு ரிமால் புயல் கரையைக் கடக்கிறது. அதாவது சாகர் தீவுக்கும் கெபுபாராவுக்கும் இடையே இந்த புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் கரையைக் கடக்கும் போது, அதிகபட்சமாக மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது.

இதனையடுத்து மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஹஸ்னாபாத் கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் (NDRF - National Disaster Response Force) தயார் நிலையில் உள்ளனர்.  அதோடு உத்திர டங்க என்ற இடத்தில் உள்ள பொதுமக்களிடம் ரிமால் புயல் கரையைக் கடப்பது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதற்கான முன்னறிவிப்புகளை வெளியிட்டனர். இது குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழு அதிகாரி ஒருவர் கூறுகையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் 2வது பட்டாலியனின் குழு ஹஸ்னாபாத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை (27.05.2024) காலை 9 மணி வரை என சுமார் 21 மணி நேரத்திற்கு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 397 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.