உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியது. கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,68,000 ஐ கடந்தது.
இந்த நிலையில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர். டெட்ரோஸ், "வேகமாகப் பரவி வரும் கரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது. ஊரடங்கின் மூலம் மக்களை வீட்டுக்குள் இருக்கச் சொல்வது சுகாதாரத்துறையின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும். சுகாதார பணியாளர்கள், பரிசோதிக்கும் மையங்களை அதிகரித்து கரோனாவை ஒழிக்க தீவிரம் காட்ட வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்யும் வசதியை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரிடம் இருந்து யாருக்கு நோய் பரவியிருக்கக் கூடும் என்பதைக் கண்டறிய தெளிவான திட்டம் தேவை. கரோனா ஒழிப்பில் உலக நாடுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.