சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கரோனா வைரஸ். உலகம் முழுவதும் 24 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் 60,000- க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில், 1765 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள சிறைகளில் 271-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல் ஷான்டாங் மாகாணத்தின் ரெஞ்செங் சிறையில் 7 போலீஸார் மற்றும் 200 கைதிகளுக்கும் வைரஸ் பரவியுள்ளது. ஜெஜியாங் மாகாணத்தில் ஷிலிபெங் சிறையில் 34 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று உள்ளவர்கள் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சிறைஅதிகாரிகள் கைதிகளின் பக்கத்தில் செல்வதற்கே தயங்கி வருகின்றனர். சிறைச்சாலைக்குள் வைரஸ் தொற்று எப்படி பரவியது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சிறை நிர்வாகம் பரபரப்பாக காணப்படுகிறது.