மனிதர்கள் மூலம் பரவும் கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவில் பரவிய நிலையில் ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இதன் பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் தான் இந்த கரோனா என கூறப்படுகிறது. சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ளது இந்த கரோனா வைரஸ். இந்த வைரஸ்கள் பாம்புகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் 25 பேர் உயிரிழந்ததாக நேற்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவல் மற்றும் உயிர்பலிகள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.