உணவகம் ஒன்றின் ஏ.சி யூனிட் வழியாக கரோனா வைரஸ் பரவியதால் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நாடுகளில் பரவியுள்ளது. இதன் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த வைரசைக் கட்டுப்படுத்த மருந்துகள் எதுவும் கண்டறியப்படாத சூழலில், சமூக இடைவெளி மட்டுமே இதற்கான தீர்வாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீனாவில் உணவகம் ஒன்றின் ஏ.சி யூனிட் வழியாக கரோனா வைரஸ் பரவியதால் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது.
சீனாவின் குவாங்சோவில் உள்ள ஒரு உணவகத்தில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி ஒரு குடும்பத்தினர் உணவு சாப்பிட்டுள்ளனர். அதில் ஒருவருக்கு கரோனா தொற்று இருந்துள்ளது. ஆனால் இதனை அறியாத அந்தக் குடும்பம் அந்த உணவகத்தில் வந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றிருக்கிறது. அன்றைய தினமும் அதற்கு அடுத்த இரண்டு தினங்களுக்கும், அந்த குடும்பம் அமர்ந்த மேஜை மற்றும் அதற்கு நேராக உள்ள இரண்டு மேஜைகளில் உணவு சாப்பிட்ட மூன்று குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு கரோனா பரவியுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா பாதித்தவரின் குடும்பத்தினர் அமர்ந்திருந்த அந்த மேஜை மற்றும் அதற்கு நேராக இருந்த இரண்டு மேஜைகளில் ஏசி யூனிட் காற்றை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வரிசையில் உள்ள மூன்று மேஜைகளிலும் உணவு அருந்தியவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா கிருமியானது ஏ.சி யூனிட்க்குள் சென்று, நேராக இருக்கும் மூன்று மேஜைகளிலும் கரோனா கொண்ட காற்றினை வெளியிட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.