கரோனா பரவல் குறித்து சிறைக்கைதிகள் மத்தியில் எழுந்த அச்சத்தால், சிறைக்குள் வெடித்த கலவரத்தில் 23 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கொலம்பியாவில் நடந்த்துள்ளது.
கரோனா வைரஸ், உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 3.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 16,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் 200 க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதனால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அந்த நாடு முழுவதும் தனிமைப்படுத்துதல் தொடங்கியுள்ளது. அத்தியாவசிய துறைகளில் பணியாற்றுபவர்களைத் தவிர மற்ற அனைவரும் வீட்டிலேயே இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொலம்பியாவின் சிறைகள் பல சுகாதாரமற்ற சூழலுடன் இருந்து வருகிறது என்று கைதிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தால் அந்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அந்தவகையில், தலைநகரான போகோடாவில் உள்ள அந்நாட்டின் மிகப்பெரிய சிறையில் கைதிகள் நடத்திய போராட்டத்தில் திடீரென கலவரம் வெடித்தது. பல கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். மேலும்,பாதுகாப்புப் படையினரும் தாக்கப்பட்டனர். இந்த கலவரத்தை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அந்த சிறையைச் சேர்ந்த 23 கைதிகள் பலியாகியுள்ளனர். இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் மர்காரிட்டா கேபெல்லோ, சிறைகள் அனைத்தும் சுகாதாரத்துடனேயே இருப்பதாகவும், கைதிகள் வேண்டுமென்றே கரோனாவை காரணம் காட்டி தப்பிக்க முயன்றது தவறு எனவும் தெரித்துள்ளார்.