
தமிழகத்தில் 2024 - 25ஆம் கல்வியாண்டுக்கான 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 03ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்தன. இத்தகைய சூழலில் இந்த பொதுத் தேர்வை எழுதிய அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எனப் பலரும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (08.05.2025) வெளியாக உள்ளது. இது தொடர்பாக பொதுத் தேர்வுகள் துறை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “மார்ச் 2025இல் நடைபெற்ற 2024 - 2025ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மூலம் (08.05.2025 - வியாழக்கிழமை) அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் காலை 09.00 மணிக்கு வெளியிடப்படப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து www.tnresults.nic.in, www.resultsdigilocker.gov.in என்ற இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.
தேர்வர்கள் இந்த இணையதள முகவரிகளில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதோடு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.