சீன செயலிகளை இந்திய அரசு தடைசெய்தது குறித்து சீனா கவலை தெரிவித்துள்ளது.
சீன நிறுவனங்களின் டிக்டாக், வி சாட், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் என இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் 59 செயலிகளை தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அதிரடியாக அறிவித்து. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகிவரும் நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து சீனா கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், "இந்த நடவடிக்கையால் சீனா கடுமையாகக் கவலை கொண்டுள்ளது, நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. சீன அரசாங்கம் எப்போதும் சீன வணிக நிறுவனங்களை சர்வதேச மற்றும் உள்ளூர் சட்ட விதிமுறைகளுக்குக் கட்டுப்படுமாறு அறிவுறுத்தி வந்துள்ளது. தற்போதும் அதையே நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். சீன நிறுவனங்கள் உட்பட சர்வதேச முதலீட்டாளர்களின் சட்ட உரிமைகளை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.