காட்டுத்தீயில் சிக்கி 120 வீடுகள் தீயில் கருகிய சம்பவம் தென் அமெரிக்க பகுதியில் அமைந்துள்ள சிலி நாட்டில் நடந்துள்ளது.
சிலி நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டின் மிகமுக்கிய நகரங்களில் ஒன்றான வல்பரைசோ நகரில் ஏற்பட்ட காட்டு தீயால் இந்த சம்பவம் நடந்துள்ளது. மலைப்பிரதேசமான இந்த நகரம் மத்திய அமெரிக்க நாடுகளில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று. மலை பகுதிகளில் உள்ள காடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீ அதிகப்படியான காற்று மற்றும் வறண்ட காற்று காரணமாக வேகமாக பரவி நகர் பகுதிக்குள் வந்துள்ளது. சுமார் 450 ஏக்கர் அளவுள்ள நிலப்பரப்பை எரித்த இந்த காட்டுத்தீ 120 வீடுகளையும் எரித்து நாசமாக்கியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதே. அதேநேரம் வெளியேற்றப்பட்ட மக்கள் தங்களது குடும்பங்களுடன் வசிப்பிடத்திற்காக தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் அந்நகரம் முழுவதும் ஏற்பட்ட மின்சார துண்டிப்பால் நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. சுமார் 1 லட்சம் மக்கள் இதனால் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். விமானங்களை பயன்படுத்தி காட்டுதீயை அணைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.