கனடாவில் படித்து வந்த தமிழக மாணவி ஒருவர் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த ரேச்சல் ஆல்பர்ட் (23) கனடாவின் டொராண்டோவில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் சப்ளை செய்ன் மேனேஜ்மென்ட் பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த 22-ந் தேதி பல்கலைக்கழகத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் ரேச்சலை வழிமறித்து கழுத்தில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, அவரது கைப்பையையும் எடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த மாணவி அங்கேயே சரிந்து விழுந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேச்சலை கத்தியால் குத்திய நபரை கனடா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தங்களது மகளை காண மாணவியின் பெற்றோர் விசா பெற முயற்சித்து வருகின்றனர். மாணவி தாக்கப்பட்ட செய்தியறிந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர், மாணவியின் பெற்றோருக்கான விசா வழங்குவது தொடர்பாக உதவி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இன்றோ அல்லது நாளையோ அவரது குடும்பத்தினர் கனடா செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி உதவித் தொகை மூலம் படித்து வந்த ரேச்சல், தனது செலவீனங்களுக்காக பகுதி நேர வேலையும் பார்த்து வந்துள்ளார். இவர் வரும் மே மாதம் தனது படிப்பை முடித்து பட்டம் பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.