பிரேசிலில் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகப் போராட்டக்காரர்கள் அந்நாட்டின் நாடாளுமன்றம், அதிபர் மளிகை மற்றும் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று அங்குள்ள பொருட்களைச் சூறையாடிய சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வலதுசாரி தலைவரும் அப்போதைய அதிபருமான ஜெயிர் பொலிஸானரோ தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் தனது தோல்வியை ஏற்காத ஜெயிர் பொலிஸானரோ தேர்தலின்போது நடைபெற்ற வாக்குப் பதிவில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி குற்றம்சாட்டி வந்தார். இதனைத் தொடர்ந்து தேர்தலை ரத்து செய்யக் கோரி பொலிஸானரோவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். சாலைகளில் போராட்டத்தில் ஈடுபடுவது, வாகனங்களுக்கு தீ வைத்து எரிப்பது போன்ற வன்முறைச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே பிரேசிலின் அதிபராக மூன்றாவது முறையாக, இடதுசாரிகளின் தலைவர் இனாசியோவ் லுலா சில்வா கடந்த வாரம் பதவியேற்றார். இந்நிலையில் மீண்டும் ஜெயிர் பொலிஸான்ரோவை அதிகாரத்திற்கு கொண்டு வர அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பிரேசிலின் தலைநகரான பிரசிலியாவில் உள்ள பொலிஸான்ரோவின் ஆதரவாளர்கள் போலீசாரின் தடுப்பு வேலிகளையும் மீறி நாடாளுமன்றத்திற்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும், மேஜை நாற்காலிகளையும் அடித்து நொறுக்கினர். பின்னர் நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்த கலவரம் குறித்து பிரேசில் அதிபர் இனாசியோவ் லுலா சில்வா, “இது பாசிசவாதிகளால் நடத்தப்பட்ட கலவரம்" என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அதிபர், " இந்த கலவரத்துக்கு, தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி சுமார் 200 பேரை போலீசார் கைது செய்ததாக பிரேசில் நாட்டின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தக் கலவரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐ. நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ், இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிவர்லி ஆகியோர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியும் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.