கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு பிறகு பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆட்சிப் பறிபோனதற்கு பிறகு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. 'இந்தியாவிற்கு இருக்கும் துணிச்சல் பாகிஸ்தானுக்கு இல்லை' என்பது போன்ற அவரது விமர்சன பேச்சுகள் சர்ச்சையானது.
இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாக பணம் பெற்ற வழக்கில் ஃபெடரல் விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராக இம்ரான் கானுக்கு மூன்றுமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக இம்ரானின் பி.டி.ஐ கட்சியின் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக இஸ்லாமாபாத்தில் பேசிய இம்ரான்கான், காவல்துறை அதிகாரி மற்றும் பெண் மேஜிஸ்திரதுக்கு மிரட்டல் விடும் படி பேசியதாக சர்ச்சைகள் எழ, இம்ரான்கானின் பேச்சுகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்ப பாகிஸ்தானின் மின்னணு ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.