அமெரிக்காவை பூலோக சொர்க்கம்போல பேசும் கூட்டத்தினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், மொத்தமுள்ள 33 கோடி ஜனத்தொகையில் 4 கோடிப் பேர் வறுமையில் வாழ்வதாக ஐ.நா. அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கொடூரமான வறுமை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அதிகாரி பிலிப் ஆல்ஸ்டன் 20 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார். அமெரிக்க அரசின் கொள்கைகள் பணக்காரர்களுக்கு பலனளிக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் மிக மிக அதிகமான வருமான சமமற்ற நிலை அமெரிக்காவில்தான் நிலவுகிறது. அமெரிக்க அரசு சமீபத்தில் அறிவித்த மிகப்பெரிய வரிக்குறைப்பு நடவடிக்கை முழுக்க முழுக்க பணக்காரர்களுக்கே பலனளிக்கிறது.
அரசு சலுகைகளை அனுபவிக்கும் ஏழைகள் சோம்பேறிகளாக இருப்பதாக ட்ரம்ப் அரசு கூறியது. அதையடுத்து அவர்கள் வேலை செய்து வாழ வேண்டும் என்று கடுமை காட்டியது. ஆனால், அரசு சலுகைகளைப் பெறும் ஏழைகளில் வெறும் 7 சதவீதம்பேர் மட்டுமே வேலை செய்யாமல் இருப்பதாக ஆல்ஸ்டன் கூறியிருக்கிறார்.
அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் 1.5 லட்சம் கோடி டாலர் வரிக்குறைப்பு அறிவித்தார். இது முழுக்க பணக்காரர்களுக்கே பலனளித்தது. ஏழை மக்களின் நிலையை மேலும் மோசமாக்கியது. இந்த அறிவிப்பு முன்னேறிய நாடுகளிலேயே மிகமிக சமமற்ற சமூகத்தைக் கொண்ட நாடாக அமெரிக்காவை நீடிக்கச் செய்கிறது என்று அவர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.