![amazon deforestation fastened in corona period](http://image.nakkheeran.in/cdn/farfuture/-WmNtM40x9ea2vTtz-lMCB-ed0dHMMPtGM5QsPvmano/1589002983/sites/default/files/inline-images/sdd_0.jpg)
கரோனா வைரஸால் உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில், அமேசான் காடு அதிகளவில் அழிக்கப்பட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா பரவலால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி அமேசான் காடுகளை அழிக்கும் பணிகளைப் பிரேசில் தீவிரப்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான் ஒன்பது நாடுகளில் பரவியிருந்தாலும், இதன் பெரும் பகுதி பிரேசில் நாட்டிலேயே அமைந்துள்ளது. இந்தக் காடுகளை வியாபார நோக்கங்களுக்காக 'ஜெய்ர் போல்சனாரோ' தலைமையிலான 'பிரேசில்' அரசு அதிகளவில் அழித்து வருகிறது. அந்நாட்டின் இந்தச் செயலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில், தற்போது இருக்கும் சூழலைப் பயன்படுத்தி காடுகள் அழிப்பு வேகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால், இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 64% காடழிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் 248 சதுர கிமீ அளவுக்குக் காடுகள் அழிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏப்ரலில் 405 சதுர கிமீ அளவுக்குக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 1,202 சதுர கிமீ அளவுக்குக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொடர் காடு அழிப்பு குறித்து அந்நாட்டு அதிபர் கண்டுகொள்ளலாம் இருப்பதோடு, கரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த முடக்கத்தைக் காடு அழிப்புக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் என இயற்கை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.